குடும்ப சண்டையால் லாபம் அடைந்த பா.ஜ.க..

வீண் பிடிவாதத்தால் தோற்ற மாயாவதி..இடைத்தேர்தல் முடிவுகள்

ரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு தொகுதிக்கு  நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள்  வெற்றி பெற்றுள்ளன.

அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.ஆளுங்கட்சியாக உள்ளது. இங்குள்ள சிண்ட் சட்டசபை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்திய  தேசிய லோக் தளம் கட்சி  எம்.எல்.ஏ.ஹரி சந்த் மிட்டா மரணம் அடைந்த தால்  நடந்த இந்த தேர்தலில் பா.ஜ.க .வேட்பாளர் கிருஷன் மிட்டா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இதுவரை பா.ஜ.க. வென்றதில்லை.

அப்புறம் எப்படி வெற்றி சாத்தியமாயிற்று?

பா.ஜ.க.வின் தேர்தல் தந்திரமும், காங்கிரசின் முட்டாள் தனமுமே இதற்கு காரணம். அந்த தொகுதியில்  பா.ஜ.க.வுக்கு சரியான  வேட்பாளரே கிடைக்க வில்லை. தொகுதி முழுதும் அலசி பார்த்தும்   ஆள் இல்லாததால், இறந்து போன ஹரிசந்த் மிட்டாவின் மகன் கிருஷன் மிட்டாவை பா.ஜ.கவுக்கு இழுத்து ,வந்து வேட்பாளராக நிறுத்தினார் –அமீத்ஷா.

காங்கிரசிலும்  வேட்பாளர் பஞ்சம்.

கைதால் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுர்ஜே வாலாவை வேட்பாளராக  நிறுத்தியது.ஏற்கனவே பக்கத்து தொகுதியில்  எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுர்ஜேவாலா இங்கேயும் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்று எரிச்சல் அடைந்த காங்கிரஸ்காரர்களே அவருக்கு ஓட்டு போடவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் அந்நியர் என்ற அதிருப்தி, தந்தை இறந்ததால் கிருஷனுக்கு தொகுதியில் உருவாகி இருந்த அனுதாப அலை ஆகிவற்றுடன் அவர் வென்றதற்கு  மற்றொரு பிரதான காரணம் – ‘அரியானா அரிமா’ தேவிலாலின் குடும்ப சண்டை.

முன்னாள் துணை பிரதமரான தேவிலால் இப்போது இல்லை. ஆனால் அவர் உருவாக்கிய இந்திய லோக்தளம் அரியானாவில் உயிர்ப்புடன் கொஞ்ச காலம் முன்பு வரை இருந்தது.

தேவிலாலின் வாரிசுகளாக அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட  சவுதாலாக்கள் உள்ளனர். அதாவது  காந்தி குடும்பம் போல் சவுதாலா குடும்பம் . அதில் ஒருவரான துஷ்யந்த் சவுதலா இப்போது எம்.பி.யாக இருக்கிறார். குடும்பத்து கோஷ்டி சண்டையில் , லோக்தளத்தில் இருந்து பிரிந்து ‘ஜனநாயக ஜனதா கட்சி என்ற பெயரில் அண்மையில் புதுக்கட்சியை ஆரம்பித்தார்.

இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி சார்பில், திக் விஜய் சிங் சவுதாலா என்பவரை வேட்பாளராக நிறுத்தினார். இவர் –பா.ஜ.க.வுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடிக்க- காங்கிரஸ் வேட்பாளர் 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த தேர்தலில் பாவப்பட்ட ஜென்மம்- ஒரிஜினல் லோக்தள வேட்பாளர் உமத் சிங் என்பவர் தான். அவர் ஐந்தாம் இடத்துக்கு  விரட்டப்பட்டார். இவரது கட்சிதான் கடந்த தேர்தலில்  வெற்றி பெற்று இருந்தது என்பது மீண்டும் நினைவு கூர்கிறோம்.

அடுத்து ராஜஸ்தானுக்கு செல்வோம்.

அண்மையில் அங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்றதை அறிவோம். வாக்குப்பதிவுக்கு சில நாள் முன்னதாக  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராம்கார் தொகுதியில் போட்டியிட்ட  வேட்பாளர் லஷ்மன் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனால் காலியாக  இருந்த ராம்கார் தொகுதிக்கு  சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது.நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

இங்கு  காங்கிரஸ் வேட்பாளர் ஷபியா சுபேர் வெற்றி பெற்றுள்ளார்.பா.ஜ.க.வுக்கு இரண்டாம் இடம்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பகத்சிங் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.இவர் வேறு யாருமல்ல. முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங்கின் மகன் ஆவார்.

உ.பி.யில் காங்கிரசுடனான  சமாஜ்வாதி கட்சியின்  உறவு முறிவுக்கு காரண கர்த்தாவாக   சுட்டிக்காட்டப்படுபவர்; மாயாவதி. அவர் இணக்கம் காட்டி இருந்தால் உ.பி.யில் மெகா கூட்டணி ஏற்பட்டிருக்கும்.

ராஜஸ்தானிலும்- மாயாவதி கட்சிக்கு காங்கிரஸ்  ஆதரவு அளித்திருக்கும். உ.பி.யில் மாயாவதி  காட்டிய பிடிவாதம், ராஜஸ்தானில்  முன்னாள் மத்திய அமைச்சர் மகனின் காப்புத்தொகையை  காவு வாங்கி  விட்டது.

இந்த தேர்தலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்- சட்டப்பேரவையில்  காங்கிரசுக்கு  பாதி எண்ணிக்கை கிடைத்து விட்டது என்பது.

கடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் 99 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் -ஆர்.எல்.டி.கட்சி  ஆதரவுடன்  ஆட்சி அமைத்தது.இந்த வெற்றி மூலம் 100 இடங்களை பெற்றிருந்தாலும் –தனி மெஜாரிட்டி பெறுவதற்கான ‘மேஜிக்’ எண்ணை எட்ட, காங்கிரசுக்கு   இன்னும் ஒரு இடம் தேவை.

-பாப்பாங்குளம் பாரதி