20 ஆண்டுக்கு முன்பு திருடிய பணத்தை திருப்பி அனுப்பிய பெண் தொழிலாளி

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டக்ஸன் நகரில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மெக்சிகன் ஓட்டல் நடத்தி வருபவர் கரியோட்டா ப்ளோர்ஸ். இவருக்கு தபால் மூலம் ஒரு கவர் வந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஆயிரம் டாலர் ரொக்கமும், ஒரு மன்னிப்பு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தையும், ரொக்கத்தையும் அந்த ஓட்டலில் 1990ம் ஆண்டுகளில் பணியாற்றிய ஒரு பெண் அனுப்பியுள்ளார்.

அதில்,‘‘ ஓட்டலில் பணியாற்றிய காலத்தில், சில பானங்களை தெரியாமல் விற்று அந்த ரொக்கத்தை நான் திருடிவிட்டேன். முட்டாள் தனமாக இந்த செயலை செய்துவிட்டேன். நான் தேவாலயத்தில் வளர்ந்தேன். அதன் பிறகு தற்போது வரை அதுபோன்ற திருட்டு செயல்களில் ஈடுபடவில்லை. சில நூறு டாலர்களை நான் திருடியதற்காக நீங்கள் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டீர்கள். அது நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால், இது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. நான் திருடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டு, நான் அனுப்பியுள்ள ஆயிரம் டாலர் ரொக்கத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக திருடப்பட்ட தொகைக்கு வட்டியும் சேர்த்து அனுப்பியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை படித்த உரிமையாளரும், இதர தொழிலாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த பணத்தை அந்த பெண்ணுக்கே திருப்பி அனுப்பபோவதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

You may have missed