அமைச்சர் சரோஜா மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை:

சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக அவர் தெரிவித்தார் .

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணி மாறுதல் செய்யவும் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டதாக ராஜமீனாட்சி புகார் தெரிவித்தார்.

தன்னை அமைச்சர் சரோஜா வீட்டிற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு செல்ல மாட்டேன் என்றும் இதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளதாக கூறினார். அதிகாரியை மிரட்டி ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்ட அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணன், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ராஜமீனாட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அமைச்சர் சரோஜா மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை, ராஜ மீனாட்சி இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ மீனாட்சி, ‘‘தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களையும் சந்தித்து நன்றி கூறி வருகிறேன். தன்னைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது. அதற்காகவே அமைச்சர் மீது புகார் அளித்தேன்’’ என்று தெரிவித்தார்.