சென்னை

ம்பது வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பு படிக்க விரும்பிய பெண் தனது 67ஆம் வயதில் பட்டதாரி ஆகி உள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம்நகரில் வசிப்பவர் 67 வயதான செல்லத்தாய்.   இவர் கடந்த 60களில் சாத்தூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர்.   பட்டப் படிப்பு படிக்க மிகவும் ஆர்வமாக இருந்த அவர் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் அப்போதைய வழக்கப்படி பி யு சி படிக்க விண்ணப்பம் செய்ய எண்ணி இருந்தார்.  ஆனால் அவருடைய தந்தை தங்கள் குடும்பத்தில் பெண்கள் உயர்படிப்பு படிக்கும் பழக்கம் இல்லை எனக் கூறி மறுத்து அவருக்கு திருமணம் செய்துள்ளார்.

செல்லத்தாய் தனது பிறந்த ஊரில் இருந்து சில கீமீ தூரமுள்ள கடம்பூரில் வாழ்க்கைப்பட்டதும் தன் கணவரிடம் தனது பட்டதாரி ஆசையை கூறி உள்ளார்.  அவரும் அதை மறுத்துள்ளார்.  வெகு நாட்கள் கழித்து சென்னையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தராக பணி புரியும் வாய்ப்பு செல்லத்தாய்க்கு கிடைத்தது.   அவர் பணி புரிய அனுமதித்த கணவர் அவருடைய மேற்படிப்புக் கனவைக் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 2009ஆம் வருடம் பணி ஓய்வு பெற்ற செல்லத்தாய்க்கு அப்போதும் பட்டப்படிப்பு படிக்க முடியாமல் கணவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது.    அவர் கணவர் கடந்த 2013ல் மரணம் அடைந்துள்ளார்.  அதன் பிறகு அவர் குழந்தைகள் அவருடைய கல்வியைத் தொடர உதவி உள்ளனர்.

தனது கல்வியைத் தொடர்ந்து தற்போது சரித்திரத்தில் தனது எம் ஏ படிப்பை முடித்து கவர்னர் புரோகித் இடம் இருந்து தனது பட்ட சான்றிதழை செல்லத்தாய் பெற்றுள்ளார்.   அவர் செய்தியாளர்களிடம், “கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை.  நான் விரைவில் சட்டக் கல்வி பயில இருக்கிறேன்.  நான் பல போராட்டங்களுக்கிடையில் என் மகள்களை கல்வி கற்க வைத்தேன்.  அவர்கள் எனக்கு கல்வி கற்க உதவினர்.  எனது பணி ஓய்வில் கிடைத்த பணம் அனைத்தையும் நான் என் கல்விக்காகவே செலவிட உள்ளேன்.” எனக் கூறி உள்ளார்.