மகனின்  பிணத்துடன் கொட்டும் மழையில் விரட்டப்பட்ட பெண் : ஐதராபாத்தில் அக்கிரமம் !

--

தராபாத்

றந்த சிறுவனின் பிணத்தை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என வீட்டு சொந்தக்காரர் தடுத்ததால் நடுத்தெருவில் மகன் பிணத்துடன் கொட்டும் மழையில் ஒரு தாய் தவிக்க விடப்பட்டுள்ளார்.

மனித நேயம் என்பது மரணம் அடைந்து விட்டது என்பது ஐதராபாத்தில் இப்போது நிரூபிக்கப் பட்டுள்ளது.   ஐதராபாத் கூகட்பள்ளி பகுதியில் வெங்கடேஸ்வர் நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரம்மா.  இவர் ஜகதீஷ் குப்தா என்பவரின் வீட்டில் தன் இரு மகன்களுடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.  இவரது மூத்த மகன் சுரேஷ் என்னும் பத்து வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட தன் மகனை ஐதராபாத்தின் அரசு மருத்துவமனையான நிலோஃபர் மருத்துவமனையில் அனுமதித்தார் ஈஸ்வரம்மா.   அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் மரணம் அடைந்தான்.   மகனின் பிணத்துடன் வீட்டுக்கு வந்த ஈஸ்வரம்மாவை ஜகதீஷ் வழி மறித்துள்ளார்.   அவர் மகள் திருமணம் அப்போது தான் முடிந்திருந்ததால் பிணத்தை உள்ளே கொண்டு வரக் கூடாது என கூறி விட்டார்.  அப்போது மழை கொட்டிக் கொண்டிருந்த போதிலும் இரக்கம் காட்ட மறுத்து ஈஸ்வரம்மாவை விரட்டி அடித்துள்ளார்.

ஈஸ்வரம்மா பிணமாக ஒரு மகனுடனும், உயிருடன் இன்னொரு மகனுடனும் கொட்டும் மழையில் நடுத்தெருவில் தவித்துள்ளார். ஜகதீஷை அந்த தெரு மக்கள் திட்டியும் அவர் அதை கண்டுக் கொள்ளவில்லை.   அக்கம் பக்கத்தினர் இரக்கம் கொண்டு ஈஸ்வரம்மாவுக்கு  தார்பாய்களைக் கொண்டு தெருவிலேயே ஷெட் அமைத்துக் கொடுத்துள்ளனர்.   அத்துடன் இறந்தவர்களை பதப்படுத்தி வைக்கும் பெட்டியையும் வாடகைக்கு எடுத்து தந்துள்ளனர்.    அது மட்டுமின்றி பணம்  வசூலித்து சுரேஷின் இறுதிச் சடங்கை நடத்தி உள்ளனர்.