திருச்சியில் பரிதாபம்: குடும்பத்தகராறில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பதகராறில் இளம்பெண் தனது இரண்டு ஆண்குழந்தைகளுடன்  தீக்குளித்து  தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2குழந்தைகளுடன் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் உள்ள  ஊருடையாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பன்னீர்செல்வம் நாகராணி குடும்பம். இவர்களுக்கு, குணா (வயது 10), சந்தோஷ் (வயது 7) என இரு மகன்களும் உள்ளனர். நாகராணி அருகிலுள்ள நிறுவனம் ஒன்றிக்கு வேலைக்கு சென்று வருவதாகவும், இது பிடிக்காமல் இருவருக்கும் இடையே  குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த குடும்ப சண்டை நேற்று அதிகரித்த நிலையில்,  நாகராணி தனது  இரு மகன்களின் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததுடன் தனது உடம்பிலும் மண்ணென்னை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   இதில் சிறுவன் குணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற இருவரும்  மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பதகராறு காரணமாக மூன்று பேர் பரிதாபமாக இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.