திருப்பூர்

திருப்பூர் ஆர் டி ஓ ஆஃபிஸ் முன்பு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பதிவு செய்யப்படாத ஸ்கூட்டரை ஒருவர் போர்ட் ஒன்று மாட்டி நிறுத்தி வைத்ததால் பரபரப்பு நிலவியது.

நாகராஜ் என்பவர் திருப்பூர் அருகிலுள்ள அங்கேரிப் பாளையம்  என்னும் ஊரைச் சேர்ந்தவர்.  இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஷோரூம் ஒன்றில் ஜுன் 30ஆம் தேதியன்று டிவிஎஸ் ஸ்கூட்டி ஒன்று வாங்கியுள்ளார்.  அவர் அதற்காக முன்பணமாக ரூ.21500 செலுத்தி விட்டு மீதித் தொகையை மாதத் தவணையாக செலுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.  இவரிடம் ஷோ ரூம் பணியாளர்கள் இந்த வண்டியை பதிவு செய்ய ரூ.1791 செலுத்த வேண்டும் என்றும், அது ஆர் டி ஓ ஆஃபிசுக்கு செலுத்த வேண்டிய லஞ்சத் தொகை என்றும் கூறி உள்ளனர்.

நாகராஜ் லஞ்சம் தர மறுத்ததால் அந்த வண்டி பதிவு செய்யப்படவில்லை.  இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு முடிவும் தெரியாமல் வண்டியை உபயோகிக்க முடியாமல் வீட்டில் வைத்திருந்தார்.  மிகவும் வெறுத்துப் போன அவர், அந்த ஸ்கூட்டரை ஆர் டி ஓ ஆஃபிஸ் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களுடன் நிறுத்தி விட்டு அதில் ஒரு போர்டை மாட்டி வைத்து விட்டார்.  அந்த போர்டில் “ஆர் டி ஓவுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பதிவு செய்யப்படவில்லை.  வாகனம் ஆர் டி ஓ விடம் ஒப்படைப்பு” என எழுதி இருந்தார்.

இதனால் ஆர் டி ஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  அலுவலகத்தினர் நாகராஜை வாகனத்தை மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டினார்கள்.  நாகராஜ் மறுத்து விட்டார்.  ”ஆர் டி ஓ சிவகுருநாதன் என்னிடம் ஷோரூம் பணியாளர்கள் சொன்னது தவறென்றும், இன்னும் ஒரு வாரத்தில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கிறார்.  ஏன் அதை இப்போதே செய்யக்கூடாது?’ என காட்டமாக கேட்கிறார் நாகராஜ்.

அர் டி ஓ இது குறித்து விசாரணை நடத்துவதாகவும், அதற்கு நாகராஜ், மற்றும் ஷோ ரூம் பணியாளர்கள் ஆஜராக வேண்டும் எனவும் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

நாகராஜ்  “நான் இது குறித்து மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன்.  இந்த லஞ்சம் பற்றி பொதுமக்கள் அறியவே இதைச் செய்தேன்.  ஆனால் இதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.  இது குறித்து 10 நாட்கள் முன்பு நான் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்.  ஆனால் இன்று வரை அந்த புகாரையும் பதிவு செய்யவில்லை” எனக் கூறுகிறார்.