பேஸ்புக் “நண்பியை” சந்திக்கச் சென்று பணம், செல்போனை பறிகொடுத்த இளைஞர்

முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணின் அழைப்பை ஏற்றுச் சென்று பணம், செல்போனை இழந்திருக்கறார் கன்னியாகுமரி இளைஞர் ஒருவர்.

முகநூல் மூலம் அறிமுகமாகி பழகுபவர்களை ஏமாற்றும் போக்கு தொடர்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன். ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறார். முகநூல் மூலம் இவருக்கு பெண் ஒருவர் அறிமுகமானார். குறுகிய காலத்தில் இருவரும் நிறைய தகவல்களை பறிமாறிக்கொண்டனர்.

அந்த பெண் தான் நாகர்கோவிலில் வசிப்பதாகவும் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கணவர் வீட்டில் இல்லாததால் தான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன் என்றும் கூறிய அவர் வீட்டிற்கு வரும்படி தனசேகரனை கு ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.

இதனை நம்பிய தனசேகரன் நாகர்கோயிலுக்குச் சென்றார். அப்போது தனசேகரனிடம், தன்னால் வர முடியவில்லை ஆகையால் தன்னுடைய தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவருடன் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.

தனசேகரனும் ஒப்புக்கொண்டார். அதன்படி அவரை சந்திக்க வந்தார் இளைஞர் ஒருவர். தனது அக்கா  அவரை அழைத்து வரச் சொன்னதாக கூறினார். அவருடன் பைக்கில் சென்றிருக்கிறார் தனசேகரன்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனசேகரனை அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு, இரகசிய எண் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார். , தனசேகரனை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் தனசேகரன்  கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டுள்ளது.

பணம், செல்போனை இழந்த தனசேகரன் வடச்சேரி காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் தனசேகரிடம் பேஸ்புக்கில் தொடர்புகொண்டது பெண்தானா அல்லது பெண் போல, ஆண் யாராவது பழகினார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பி சென்ற இளைஞரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.