டில்லி:

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அடையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்கவுள்ள ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் ஆணையர்களாக ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர். ஏ.கே.ஜோதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ராவத்தை புதிய தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இவர் நாளை தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் ராவன் தி எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ ஓட்டு போடுவதற்கு ஆதார் அடையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்குப்பதிவு எந்திரத்தை அடையும் முன்பு அவரது பயோமெட்ரிக் தகவல்களை உறுதிபடுத்த வேண்டியது அவசியம்.

இதை ஒருங்கிணைக்க வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதில்லை. தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, ஏப்ரல்&மே மாதத்தில் கர்நாடகா, மிசோராம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேஷ் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்கள் ராவத் தலைமையில் நடைபெறவுள்ளது.