டில்லி:

ஆதார் கட்டாயம் ஆக்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த இணைப்பு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் கெடு விதித்திருந்தது. எனினும் இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகளுடனும், செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவது கிடையாது என கூறிவிட்டார். மேற்கு வங்க அரசு சார்பில் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்தது.

பிற வழக்குகளுடன் இவ்வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற சட்டத்திற்கு எதிராக இது போன்ற மனுவை மாநில அரசு எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ஆகும். வேண்டும் என்றால் மேற்கு வங்காள முதல்வர் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆதார் தொடர்பான வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்குகளை நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.