ஆதார் குறித்து தவறான தகவல்: விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்துக்கு தடை கோரி மனு

சென்னை:

தார் குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறி  நடிகர் விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரும்புத்திரை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இரும்புத்திரை படத்துக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர்  தாக்கல் செய்துள்ள  மனுவில், நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து தவறாகச் சித்திரித்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆதார் அடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவது போல காட்சிள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகளுடன் திரைப்படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து மக்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.