சென்னை,

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்துவிதமான பதிவுகள் மற்றும் பரிவர்த்தனைக்கும் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று திருமண பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதை குடியுரிமை ஆதாரமாகவோ அல்லது இருப்பிட ஆதாரமாக ஏற்க இயலாது.

மணமக்களின் பெற்றோரின் பெயர்கள் மற்றும் முகவரியை சரிபார்க்கும் போது, அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் உள்ள பெயர் மற்றும் முதல் எழுத்தும் (இனிஷியல்), விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதல் எழுத்தும், முகவரியும் ஒத்துள்ளதா என்பதை பதிவு அலுவலர்கள் நன்றாக பரிசீலித்த பின்னரே பதிவை மேற்கொள்ள வேண்டும்.

மணமக்களின் பெற்றோர் யாராவது இறந்துவிட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிபார்த்து அதன் நகல் பெறப்பட்டு சேர்க்கப்பட வேண்டும்.

மணமக்களில் யாராவது ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தால், இறந்தவரது இறப்புச் சான்றின் அசலை சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாகப் பெற்று சேர்த்த பின்னரே பதிவை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.