மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம்: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்கவும் ஆதார் கட்டாயம் தேவை  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு மாநிலத்தவர்கள் தமிழக இருப்பிட சான்றிதழ் பெற்று சேருவதை தவிர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தில், மாணவ மாணவிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வின்போது,  பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அவர்கள் இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் தமிழக ஒதுக்கீடுகளை பெற்றதால், தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக  தமிழக இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க கோரி மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலத்திலும் மருத்துவ சேர்க்கைக்காக விண் ணப்பித்துள்ளனரா என மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது குறித்து  இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்வது கடினம், தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக கூறியது.

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு  மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சேரும் மாணவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும், இதுகுறித்து   இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை  இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.