டில்லி

முகநூலை பயன்படுத்த ஆதார் தேவை என புதிய விதிமுறை அமுலாக்கப்பட உள்ளது.

முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன் படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் முகநூல் அதிகம் பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.   அதே நேரத்தில் இந்த முகநூல் கணக்குகளில் பல கணக்குகள் போலியானவை என கூறப்படுகிறது.    பலரும் தங்கள் பெயர் மற்றும் புனைப்பெயர் மட்டும் இன்றி பிரபலங்களின் பெயர்களிலும் கணக்குகள் துவங்கி உள்ளனர்.

இந்த கணக்குகள் உண்மையானவையா என ஆதார் மூலம் சரி பார்க்க முகநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.   அதன் முதல் கட்டமாக  மொபைல் மூலம் கணக்கு துவங்குபவர்களிடம் உங்கள் பெயரை ஆதரில் உள்ளது போல பதிவு செய்யவேண்டும் என கேட்கப்பட உள்ளது.   அதன் பின்பு அதை ஆதார் மூலம் சோதனை செய்யப்படும் என தெரிய வந்துள்ளது.

இந்த சோதனை புதிய கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே எனவும் அதுவும் மொபைல் மூலமாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே என கூறப்படுகிறது.    கணக்கின் பெயர்களை ஆதார் அட்டையில் உள்ளது போல் அமைத்துக் கொள்பவர்களுக்கு மொபைல் மூலம் புதிய கணக்கு துவங்குவதில் எந்த இடையூறும் இருக்காது என தெரிய வந்துள்ளது.