டில்லி:

மூக வலைதளங்களில் வதந்திகளை பரவுவதை தடுக்கும் நோக்கில், பயனர்களின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க  உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கை, உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது. இதன் காரணமாக பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைந்தேறி வருகின்றன.  இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அதுபோல, சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதால் அதனை தவிர்க்க அந்த கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான  அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதி மன்றத்தில், பொதுநல மனு  தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  , ஆன்லைன், மற்றும் சைபர் குற்றங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டால் உடனே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்ற  நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ்  அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.