டில்லி,

பான் கார்டுடன் ஆதார் எண்ணை மத்திய அரசு இணைப்பதில் தவறு இல்லை என்று பின்வாங்கி உள்ளது உச்சநீதி மன்றம்.

வரி ஏய்ப்பு செய்ய மக்கள் வெட்கப்படாததால் வருமான வரித்துறையின் பான் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தவறு இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டுடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயம் மற்றும்  அரசின் 90க்கம் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அரசு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கனவே அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் , ஆதாரை கட்டாயமாக்குவது ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

குறிப்பாக வருமான வரி பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு முந்தைய வழக்குகளின் போது கண்டிப்புடன் கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர்  பல பான் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் வரி ஏய்ப்பு செய்வதை சுட்டிக்காட்டி பேசினார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் அமர்வு , ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய புதிய வருமான வரி சட்டத்தை பரிசீலிக்க முன் வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி சிக்ரி,

மக்கள் வரி ஏய்ப்பு செய்வது வெட்கக்கேடானது என்று கருத்து தெரிவித்துள்ளார். வரியை தவிர்ப்பது வேறு ஏய்ப்பது வேறு என்று தாங்கள் புரிந்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வரி ஏய்ப்பு காரணமாகவே,  மத்திய அரசு இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தி யிருப்பதாகவும் வரி ஏய்ப்புகளை மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாகவும் நீதிபதி சிக்ரி கூறியுள்ளார்.

இதன் காரணமாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகிறது.