மும்பை: கோவிட்-19 சிகிச்சைக்காக, ரெம்டெசிவிர்(remdesivir) மற்றும் டோசிலிசுமாப்(tocilizumab) மருந்துகளை வாங்க வேண்டுமெனில், நோயாளியின் உறவினர் ஆதார் அட்டை விபரங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு, ஒப்புதல் படிவம், கொரோனா பரிசோதனை பாசிடிவ் முடிவு அறிக்கை மற்றும் தொடர்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மராட்டிய மாநில உணவு மற்றும் மருந்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட மருந்துகளை உற்பத்தி செய்வோரிடமிருந்து, மருத்துவமனைகள் நேரடியாக அவற்றை வாங்கி பதுக்குகின்றனவா? என்பது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது மற்றும் கள்ளத்தனமாக விற்கப்படுவது தொடர்பாக எழுந்த புகார்களையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில உணவு மற்றும் மருந்துகள் துறை அமைச்சர் ராஜேந்திர ஷிக்னே தெரிவித்துள்ளார்.
“மேலும், இந்த மருந்துகள் தேவையேப்படாத நபர்கள் இவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றை கள்ள விலைக்கு விற்கிறார்கள் என்ற புகாரும் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் அனைத்தையும் கண்காணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.