புதுடெல்லி: மத & ஜாதிக் கலவரங்கள், தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகிவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் அரசின் நிதியுதவியைப் பெற வேண்டுமானால், ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தீவிரவாத தாக்குதல்கள், வகுப்புக் கலவரங்கள், கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறான உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாநில அரசுகளிடமிருந்து உதவிக்கான கோரிக்கைகளைப் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும். இதற்காகவே, பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டும் வருகிறது.

இனிமேல், மத்திய அரசின் உதவியை பாதிக்கப்பட்டவர்கள் பெற வேண்டுமெனில், அவர்கள் ஆதார் வைத்திருப்பது அவசியம். அப்படியில்லாதவர்கள் உடனடியாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை கிடைக்கும்வரை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை மற்றும் விவசாயிகளுக்கான கிசான் அட்டைப் போன்றவைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.