நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி:

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண்  கட்டாயம்  என்று சிபிஎஸ்இ கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆதார்  இல்லை என்றால்  அதற்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது ஆதார் தகவல்களை கட்டாயம் பதிவிட வேண்டும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த மாதம் 26ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ‘நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.  ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ‘அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத்தைச் சேர்ந்த அபித் அலி படேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின்  அட்டார்னி ஜெனரல் வேணுகோபால், நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என நாங்கள் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்த வில்லை என்றும், இந்த ஆணடு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று கூறினார்.

இதையடுத்து, சிபிஎஸ்இன் உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும், தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்றும்,  மாணவர்கள்  அதற்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளை  சமர்ப்பிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான ஆன்லைன்  ரெஜிஸ்ட்ரேஷன் பிப்ரரி 9ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 9ந்தேதி இதற்கு கடைசி நாள்.

நீட் நுழைவு தேர்வு மே 6ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.