கைரேகையின் ரப்பர் ஸ்டாம்பால் காசு ஈட்டிய ஆதார் அதிகாரி
அவுரங்காபாத். மகாராஷ்டிரா
ஒரு ஆதார் பதிவு அதிகாரி தனது கைரேகையின் பதிவை ரப்பர் ஸ்டாம்பாக செய்து ஆதார் அட்டை பெறுபவர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.
ஆதார் அட்டை என்பது ஊழலற்ற பரிவர்த்தனைக்கு வழி வகுக்கும் என்பது ஆதார் சட்டங்களில் ஒன்றாகும். ஆனால் சட்ட நுணுக்கத்திலும் சில கெட்ட நுணுக்கங்களை கண்டு பிடிப்பவர்கள் உள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவ்வகையான மோசடியினால் பல போலி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவுரங்காபாத் நகரில் உள்ள அரிகந்த் ஜெராக்ஸ் செண்டர் என்னும் கடையில் புதிய ஆதார் அட்டைகள் வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. ஏற்கனவே ரூ.500 அளித்தால் ஆதார் அட்டை விவரங்களை கண்டறியும் மென்பொருள் விற்பனை ஆனது தெரிந்ததே. தற்போது இந்த புகார் எழுந்ததால் உடனடியாக அந்த கடைக்கு சென்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்தக் கடைகள் ஆதார் அட்டைகளை பதியவோ வழங்கவோ உரிமம் பெறாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சோதனை இட்டதில் அந்த கடையில் ஒரு கைரேகை ரப்பர் ஸ்டாம்ப் கிடைத்துள்ளது. காவல்துறையினர் அந்தக் கடைக்காரரை கைது செய்து அந்த கைரேகை குறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவுரங்காபாத் நகரில் ஆதார் பதிவு அதிகாரியாக பணி புரிபவர் மங்கேஷ் சீதாராம் பலேராவ். இவர் தனது கைரேகை பதிவை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி தனது கூட்டாளிகள் சிலருக்கு அளித்துள்ளார். அவர்கள் அந்த ரப்பர் ஸ்டாம்பை உபயோகித்து பலருக்கு புதிய ஆதார் அட்டை வழங்குதல், திருத்தங்கள் செய்தல் ஆகியவைகளை நடத்தி உள்ளனர்.
ஆதார் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட அதிகாரியின் கைரேகை பதிவின் மூலமே ஆதார் விவரங்களை மாற்றவும் புதியதாக பதியவும் முடியும். இவ்வாறு புதிய அட்டை கேட்பவர்களுக்கு எந்த ஆவணத்தையும் பரிசோதிக்காமல் புதிய அட்டைகளை இவர்கள் அளித்துள்ளனர். அதன் மூலம் பெரும் தொகையை ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறையினரும் ஆதார் அதிகாரிகளும் அதிகாரியிடமும் அவர் கூட்டாளிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.