இன்று ஆடி 18: பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடி பெருக்கு!

ன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம்  அம்மனுக்கும் பிடித்த மாதம் ஆடி. ஆடிப்பெருக்கு அன்று அம்மனை வழிபட்டால், வாழ்வின் வளத்தை  பெருக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாத விழாக்களில் மிகவும் விசேஷமானது  ஆடிபெருக்கு.  ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இன்றைய நாளில்  சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது விசேஷமானது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வேண்டினால் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பயிர் செழிக்க வளம் அருளும் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரைகளிலும், நதிக்கரைகளிலும் ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதம் காவிரியைச் சுற்றியுள்ள, 18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், இந்த 18ஐ கணக்கில் கொண்டு ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறார்கள்.

ஆடிப்பட்டம் தேடி விதை

ஆறு என்றால் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி  இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப் பெருக்கு.

ஆடி மாதம்18ம் நாள் வரும் ஆடி பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடி களில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன் றெல்லாம் செய்வது.

மேலும், இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி அரிசி – கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே – பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.

ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.

ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவ சாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை.

அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர். நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும்.

அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர்.

இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர். ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன.

காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர்.

ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.

ஆடிப்பெருக்குக்கு சிறப்பு  பவானி சங்கமம். இங்கு 3 நதிகள் கூடுகிறது. இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிப்பெருக்கை திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்நாளை சிறப்பிக்கும் வகையில்,  பவானி சங்கமத்தில் சங்கமேஸ்வரர் கோயிலில் காலை அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.

விவசாயம் தழைக்க விசேஷ வழிபாடு

ஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும்.

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.

காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு விழா

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான்.  குறிப்பாக காவிரி ஆற்றங்கரையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இன்றைய தினம்  பெண்கள்  காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள . இளம் பெண்கள், இளம் தம்பதிகள்,  நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்கு படையெடுத்து செல்வார்கள்.

அவர்கள்  ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்து வைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டை யில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.

வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்க ளுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள்.

காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.

இன்றைய நாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் ஆலயத்தில் இருத்து புடைவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலியவற்றை வைத்து ஆராதனை செய்வர். பின்னர், அவை அனைத்தும், ரங்கநாதரின் தங்கையாக கருதப்படும் காவிரி அன்னைக்கு சீர்வரிசையாக அனுப்பப்படும்.

ஆடி பதினெட்டாம் பெருக்குக்கு இணைந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முளைகொட்டு திருவிழா என்றவாறு அனைவரும் முளைபாரி கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வணங்கி பின் அவை ஆற்றில் கலக்கவிடப்படும்.

ஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி