மேல்மலையனூர் அங்காளம்மன் – ஆடி வெள்ளி 

மேல்மலையனூர் அங்காளம்மன் – ஆடி வெள்ளி

மேல் மலையனூர் கோவிலில் அங்காள பரமேஸ்வரியாக அம்பாள்  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்காளம்மன் இத்தலத்தில் மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள். அவள் அருகில் சிவனும் வீற்றிருக்க, பக்தர்கள் இப்புற்று மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.இன்று 24/7/2020 ஆடி வெள்ளி அன்று அம்மன் திருவடிகளை வணங்குவோம்

பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கொய்ததால் சிவனுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தலை சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. என்ன முயற்சி செய்தும் கையை விட்டு அகலாததுடன், சிவனுக்கு இடப்படும் உணவு வகைகளையும் போட்டவுடன் கையிலிருந்த அத்தலையே உண்டு வந்தது.

இதனை முடிவுக்குக் கொண்டு வரச் சிவன் விரும்பினார். அப்போது, பார்வதி தேவி அளிக்கும் புற்று மண் பலருக்கும் நன்மை அளிப்பதை அறிந்தார் சிவன். தன் தொல்லையும் நீங்க வேண்டும் என்றார்.

விஷ்ணு கூறிய அறிவுரைப்படி பார்வதி தேவி, மூன்று கவளம் அன்னத்தை எடுத்து, இரண்டு கவளத்தைச் சிவன் கையில் இட, பிரம்ம கபாலமே வழக்கம் போல் உண்டு விடுகிறது. மூன்றாம் கவளத்தைத் தவறுதலாகப் போடுவதுபோல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவியான அங்காளம்மன்.

உணவின் ருசியில் மயங்கிய கபாலம், மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்த கபாலத்தைக் காலில் போட்டு மிதித்து அடக்கிவிடுகிறாள். இப்படியாகச் சிவனுக்குப் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குகிறது என்கிறது ஸ்தல புராணம்.

பின்னர் கோபம் தணிந்த அன்னையும் தனது சுய உருவம் எடுத்து அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்காளம்மன் இத்தலத்தில் மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள்.

அவள் அருகில் சிவனும் வீற்றிருக்க, பக்தர்கள் இப்புற்று மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். பக்தர்கள் கபால வேடமிட்டும், வேப்பஞ்சேலை அணிந்து வந்தும் பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர். இத்திருக்கோவிலின் தல விருட்சம் வில்வ மரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.