ஆடுபுலி ஆட்டம்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

“கட்டையா, இன்னியோட, நம்ப அம்மாளுக்கு செய்யற சடங்கு முடிஞ்சிடுச்சி எனக்கு ஒரு வேலை எட்டத்தூர்ல (வேறு ஊர்) இருக்கு நான் போவணும், அதால நீ சின்னவன சேத்துக்கிட்டு ஒழவு (உழவு) ஓட்டிடு.”

“எங்க நடுலவனே? இன்னும் அம்மாளுக்கு முப்பது கூடமுடியல, நாளைக்கு வேற கசப்புத்தலை, நீ ………. “ என இழுத்தான் கட்டையன்.
“அதெல்லாம் இருந்து பாருங்க” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றான். “த பார்ள” (இதோ பாரு புள்ள) “நான் பூட்டு வர வரைக்கும் புள்ளிவளப் பத்திரமாப் பாத்துக்க, நான் வர்ரதுக்கு ஒரு மாசமும் ஆவும், ரெண்டும் ஆவும் கேட்டுக்கிட்டியா?” என சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
“இரண்டு ஜதை (எண்ணிக்கை) சோமம் (வேட்டி), சட்டை  எடுத்து பையில வச்சிருக்கேன், பூட்டு வாங்க, பத்திரமா இருங்க, வேலை  கனமா இருந்தா  என்னையும் இட்டுட்டுப்போங்க” என அஞ்சலம் கூறினாள்.
நடுலவன் என அழைக்கப்படும் நடு சாமி எப்போதும் போல திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக நினைத்து அனைவரும், அனுப்பி வைத்தனர், உண்மையில் அவன் சென்னை வந்து காசிக்குச் செல்லும் ஒரு குழுவுடன் ரயில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
சிறு வயதிலிருந்து மனதில் குடியேறிய எண்ணம், இன்னும்  சில நாட்களில் நிறைவேறப் போவதை நினைத்து லேசாகப் புன் முறுவல் பூத்தான். “அம்மாவுக்காக இதுவரை காத்திருந்தேன், இனி என்ன” என மீண்டும் புன்முறுவல் பூத்தான்.
தனக்குப் பின் இருக்கும் தம்பியும், தனக்கு மூத்தவன் அண்ணனும்  இனி குடும்ப பாரத்தை சுமக்கட்டும் மனைவி அஞ்சலை வீட்டிற்கு முன் புறம் முட்டைப்பணியாரம், இட்டிலி சுட்டு விற்கிறாள், அவளும் பசங்களும் வயிற்றைக் கழுவிக் கொள்ளுவார்கள், அம்மாளும் போய் சேர்ந்து விட்டாள், இனி என்ன? வேலை? எனக்கு இந்த ஊரில் என நினைத்துக் கிளம்பினான்  காசிக்கு,  நம்ப  கதா  நாயகன்  நடுசாமி  என்று  அழைக்கப்படும்  நடுலவன்.

காசிக்கு செல்லும் ரயில் வண்டியில் எண்பது சதவீதம் வயதானவர்களே இருந்தனர். சில பேர் ஜால்ரா, மேளம், சப்ளாக்கட்டை வைத்துக்கொண்டு பாடி வந்தார்கள், அவர்களை அழைத்து வந்த அமைப்பாளர்கள், நேரத்துக்கு நேரம்  சுட  சுட  உணவினைப் பரிமாறினார்கள் அவர்களுடன் இவனும் சேர்ந்து பரிமாறினான், அவர்களுக்கு சேவை செய்தான்.
காசி  எல்லையைத்  தொடும்  வரை  பரபரப்பாக  இருந்தான்,  காசியைத்  தொட்டவுடன் சிலிர்த்து விட்டான். அந்த அமைப்பாளரிடம்,
“இன்னும் கிளம்ப 10 நாட்களுக்கு மேலாகும் இல்லையாங்க சார்? அம்புட்டு நாள் என்னால உங்கக்கூட இருக்க வாய்க்காது சார், நான் இங்க ஒரு ஆளைத்  தேடி வந்தேன், அதனால  என்  செல்  நெம்பர்  உங்ககிட்ட இருக்கில்ல? எதுனாலும் எனக்கு போன் அடிங்க, நான் பூட்டுவாரேன்,” என அவர்கள் தங்கியிருந்து மடத்திலிருந்து  கால்  போன  போக்கில் நடத்தான்.
பல மடங்கள், வேறு, வேறு மொழி பேசும் மக்களுக்கு, தங்கவும், சுற்றிப்பார்க்கவும், காசியில்  நிறைய  இருந்தது.
சிறு, சிறு கோயில்கள், எங்குப் பார்த்தாலும் காவி நிறம் அணிந்த பக்திமான்கள், ஒரு புறம் ஆடை அணியாத அகோரி சாமியார்கள், மற்றொரு புறம் யாத்ரீகர்கள், எங்கு பார்த்தாலும்  காசிப்பட்டுக்கெனக் கடைகள்,  சாமி  சிலைகள், செந்தூரம்,  குங்குமம், நிறைய திருநீறு, சிற்றுண்டிக்கடைகள் என பயங்கரமான சுறுசுறுப்பாக காசி மிளிர்ந்தது, இதையெல்லாம் அமைதியாக கங்கையம்மன் பார்த்துக் கொண்டு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தாள் நீர் வடிவில், அதோடு நம் கதா நாயகனும் அனைத்தையும்  மனதில்  பதித்துக்  கொண்டே  வந்தான்.
இரவாகிவிட்டது, தன் குழுவினர் இருந்த மடத்துக்கு செல்ல அவனுக்கு வழியும் தெரியாது, தவிர அங்கிருந்து நடந்தே பத்து கிலோ மீட்டர் தள்ளி வந்து விட்டான், கால பைரவ மந்திர் அருகில் உள்ள ஒரு தங்கும் இடத்தில் தங்கி விட்டான்.

அடுத்த நாளும் எதிர்ப்பட்ட சாமியார்கள் முகத்தையெல்லாம் பார்த்தான், இவன் எதிர்ப்பார்த்த  சாமியார்  அந்தக்  குழுவில்  இல்லை,  இப்படியே  ஒவ்வொரு  நாளும்,  காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி கோயில், துர்கா மந்திர், அன்ன பூரணி ஆலயம், அனுமன் ஆலயம் என சுற்றி சுற்றித் தேடினான்.
இப்படியே எட்டு நாட்களுக்கு  மேலாகி  விட்டது,  கிடைத்த  இடத்தில்  காசு கொடுத்தோ, இலவச சாப்பாடோ சாப்பிட்டுக்கொண்டான்.
வந்த வேலையை முடிக்காமல் ஊருக்கு செல்லக் கூடாது குழுவினர் செல்லட்டும், இருந்து  வேலையை  முடித்து  விட்டுத்தான்  செல்ல  வேண்டும்  என  நினைத்தான்.
பத்தாம் நாள் மாலை நேரம் கங்கைக்கு அவ்வளவு அழகாக ஆரத்தி எடுத்தார்கள், அதைப்பார்த்து மனம் லேசாகியது, பின் அருகில் இருந்த  ஒரு  தமிழ்  சாமியாரிடம் பேசினான். அவர் இங்கு வந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றும், எப்போதாவது குடும்பத்துனகுடன் போனில் பேசுவதோடு சரி என்றார். மற்றபடி காசியே சொந்த ஊராகி விட்டது என்றார்.
“சரிப்பா, உன் பேரென்ன? ஊரென்ன?”
“என் பேர் நடுசாமி, என் ஊர் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள சங்கராபுரம்” என்று பேசிமுடிப்பதற்குள்.
“அடடா, நான் பல வருஷமாக கேக்குற, பேர், ஊருமாவே இருக்கு,” என சிரித்தார்.
“சாமியரய்யா, என் பேர், ஊர் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றான் நடு சாமி.
“இல்லப்பா,  காசியில இருக்கிற அன்னபூரணி ஆலயத்துக்கிட்ட தங்கும் மடம் இருக்கும், தெரியுமா?”
“ஆமா, அதிலதான் எங்க குரூப்பெல்லாம் இருக்காங்க” என்றான்.
“ம், ம், ம்… அங்கு ஒரு சேவகர் இருக்காரு, அவர் காவித் துணி போட்டிருந்தாலும், அங்கு வர எல்லாத்துக்கும் மடத்தின் சார்பா, சேவை செய்வார், காசு எதுவும் வாங்கிக்க மாட்டார்,  கொடுப்பதை சாப்பிடுவார்,” என்றபோது,
“அவருக்கு இப்ப என்ன?” என பரபரப்பாகக் கேட்டான்.

“அவரை எனக்கு முப்பது வருடமாத் தெரியும், அவர் இங்கு எந்தக் கோயிலுக்கு வந்தாலும் தன் பெண்டாட்டி பிள்ளைகள் பேருடன், கட்டையன், நடு சாமி, சின்னசாமி பேருக்கும் வேண்டுவார், அர்ச்சனை செய்வார், அவர் ஊர்க்கூட சங்கராபுரம் என்று தான் சொல்வார்” என சொன்னார்.
“நன்றிங்க அய்யா, நான் என் குரூப் தங்கியிருக்கும் மடத்துக்குப் போகணும்” என பரபரத்தான்,
“எப்படிப் போவ? மழையைப் பார்? காலையில்  போவலாம்,”  என்று  அவருடன் ஒரிடத்தில்  தங்க  வைத்தார்.
அனிறிரவு தூக்கமே வரவில்லை,  அவன்  என்  கையில்  மாட்டட்டும்  நாளை அவனைக் சொன்று விட்டு, நேராக தமிழ்நாடு போய் போலீசில் சரணடைய வேண்டும் என நினைத்தான்.
ஆம், அவன் அப்படி நினைக்கக் கரணம், “ஆடுபுலி ஆட்டம்”

முப்பது வருடத்திற்கு முன்பு தன் தந்தை மருதையும் அவர் நண்பர் பிச்சமுத்துவும் வயல் வேலைகளை முடித்து விட்டு, களத்து மேட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடும் போது ஏற்பட்ட தகராறில் மருதையை பிச்சமுத்துக் கீழே தள்ளிவிட்டதில் அப்போதே மருதை உயிர் போய் விட்டது.
போலீசில் கேஸ் கொடுப்பதற்குள் பிச்சமுத்து ஊரைவிட்டே ஓடி விட்டான் என்றுப் பேசிக் கொள்வார்கள்.
அதன் பிறகு மூன்று பிள்ளைகளை தாய் பாவாயி ரொம்ப, சிரமப்பட்டு வளர்த்தாள், அதுபோலவேப் பிச்சமுத்துவின் குடும்பமும் தகப்பனில்லாமல் குழந்தை குட்டிகளோடுத் தவித்ததை இவன் பார்த்து வளர்ந்தான்.
ஒரே நேரத்தில் இரண்டுக் குடும்பங்களை அனாமத்தாக (நிராதரவாக) விட்ட அவனைக் கொல்ல வேண்டும் என சிறு வயதிலிருந்தே நடுலவன் திட்டம்  தீட்டினான், ஆனால் அந்தக் கொலைகாரன் எங்கு என்றுத் தெரியாமல் தவித்தான்.
இப்போது பிச்சமுத்து வீட்டிற்கு ஒரு சில சமயங்களில் காசியிலிருந்து போன் வருகிறது என அறிந்து, பிச்சமுத்து காசியில் இருப்பதாக அறிந்துதான் வந்தான்.
அடுத்த நாள் காலை அந்த சாமியாரிடம் கூட சொல்லாமல் குழுத் தங்கியருந்த மடத்துக்கு சென்றான், அப்போது அங்கிருந்த ஒரு சிறு சிவன் கோவில் ஏனோ இவனுக்கு சாமி கும்பிட வேண்டும் போல இருந்தது, உள்ளே சென்றான்.
அங்கு ஒரு சாமியார் காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து “தாவாயி, செல்வி, பழனி, பாவாயி கட்டையன், நடுசாமி, சின்னசாமி எல்லாரும் நல்லாருக்கணும்” என முணுமுணுத்துக் கொண்டே கீழே விழந்து வணங்கினார்,
“ஓ! இவன் தான் பிச்சமுத்துவா?” என நினைத்து அவன் கழுத்தை நெறிக்கலாம் என நினைக்கையில் விர்ரென வெளியில் சென்று, சூரியனைப் பார்த்து வணங்கி நின்றான் பிச்சமுத்து.
கும்பிடு போட்டுக்கக் கடைசியாய், என நினைத்துக் கொண்டே நின்றான், நடுலவன் சுற்றிலும் ஆட்கள் வருவதும், போவதுமாய் இருந்தார்கள் லட்சியம் நிறைவேறுவதால் அவனுக்கு அதெல்லாம்  கண்ணில் தெரியவில்லை.
சூரியனை வணங்கியவர் அப்படியே “பொத்தென்று” விழுந்தார் உடனே அந்த மடத்திலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள்.
“பிச்சை, எழுந்திரு, எழுந்திரு” என மடத்தின் தலைவர் கத்தினார், என்ன பயன் உயிர் ஈசனிடம் சென்றுவிட்டதே.
“அடடா, பத்து வார்த்தைக்கூட ஒரு நாளைக்கு பேச மாட்டார், பாவ மன்னிப்புக் கேட்பது போல கோயில் கோயிலாக செல்வார், கண் கலங்குவார் அவருக்குள் என்ன வேதனையோ?  காசி  வரும் மக்களுக்கு அப்படி ஒரு சேவை செய்வார்” என மடத்திலிருந்தவர்கள்  கண்ணீர்  விட்டனர்.
நடு சாமியின் “பழி”வாங்கும், மற்றும் “பலி”வாங்கும் எண்ணமும் “பளி”ச்சென மறைந்தது, கண்களில் இருந்து நீர்  சுரந்தது.
மடத்துத் தலைவரிடம், “அய்யா, இவர் எனக்குத்  தெரிந்தவர்தான், இவர் இங்கிருப்பதுத் தெரியாமல், ஊரெல்லாம் சுற்றினேன், நான் பார்க்க, வந்த வேளையில் இப்படி ஆகி விட்டது” என அழுதான்.
“ஓ, அப்படியா,” என்றார் அந்த மடத்தின் தலைவர்.
“அதனால் இவருக்கு நான் மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கணும் நீங்க” என்றான்.
“ஓ, தாரளமாக, அவருக்கு நீதான் செய்ய வேண்டுமென்பது ஈசன் கட்டளை, தடுக்க நான் யார்?”
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!
என  மெலிதாக  பாடல்  சத்தம்  கேட்டது,  நடுசாமி,  பிச்சைமுத்துவிற்கு  இறுதிச் சடங்குகளை செய்ய ஆரம்பித்தான்.
சில சமயங்களில் மேலிருப்பவன் போடும்   கணக்கிற்கு விடை இப்படி மாறிதான் கிடைக்கும், அதனை மாற்றவே முடியாது.
தன்னைப் புலியென நினைத்த இரு ஜீவன்களும் ஆட்டுக்குட்டியைப்போல ஈசனிடம் அடங்கி, அன்பாய் நின்றது, இது நடுசாமிக்கு மட்டுமல்ல நமக்கும் வியப்புதான்.

நிலையஞ்சி  நீத்தாருள்  எல்லாம் கொலையஞ்சிக்

கொல்லாமை  சூழ்வான்  தலை.

(குறள் 33 : 05)
பொருள்  :
இல்வாழ்க்கைக்கு பயந்து துறவு செல்லும் பெரியோரை விட, கொலைபாவத்திற்கு பயந்து, கொல்லா விரதம். மேற்கொள்பவரே தலை சிறந்தவர். மீண்டும் பிறவாமல் இருக்க தவம் இருப்பவர்களை விட மேலானவர், கொல்லாதவர்.