தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் விமானங்கள் இயக்க தமிழக அரசு
தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை 1,248 விமானங்கள் மூலம் மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு 1,63,187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 17,707 தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்படும் எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களைத் தரையிறக்க ஏன் அனுமது மறுக்கிறது என தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்கள் மூலமும், சென்னை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் மூலமும் தொடர்ந்து நாடு திரும்பி வருவதாகவும், சர்வதேச விமான சேவைகளுக்கு தமிழக அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊகங்களின் அடிப்படையிலேயே அரசுக்கு எதிராக திமுக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கனிமொழி எம்.பி. தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இதற்காக, பலமுறை மத்திய அமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.