காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டோம்: ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் கூறப்படுவதாவது; காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக, அக்கட்சிக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம்.

அக்கட்சியின் செயல்பாடுகள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. அவர்களின் இந்த செயல்கள், பாரதீய ஜனதா கட்சிக்கே சாதகமாக முடியும்.

டெல்லியில் அவர்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லாத நிலையிலும்கூட, நாங்கள் 3 நாடாளுமன்ற தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்க தயாராக உள்ளோம்.

ஆனால், பஞ்சாபில் எங்களுக்கு 4 மக்களவை உறுப்பினர்களும், 20 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தும், எங்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்க மறுக்கிறார்கள். மேலும், ஹரியானா மாநிலத்தில் அவர்கள் ஒரேயொரு இடத்தில் வென்றிருந்தாலும், எங்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்க மறுக்கிறார்கள்.

இதை எப்படி ஏற்க முடியும்? எனவே நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணிக்கு, முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி