டில்லி

லோக் ஆயுக்தாவுக்கு தங்கள் சொத்து விவரங்களை அளிக்க 50க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

லோக் ஆயுக்தா மற்றும் லோக் பால் என்னும் மக்கள் நீதிமன்றத்தை நாடெங்கும் அமைக்க போராடி வருபவர் சமூக ஆர்வலர் அன்னா அசாரே. இவருடைய முக்கிய சீடரான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டில்லி முதல்வராக பதவியில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான இவரால்  டில்லியில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் நீதிபதியாக ரவா கேத்ரபால் என்னும் ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப் பட்டுள்ளார்.

நீதிபதி கேத்ரபால் டில்லி சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களை லோக் ஆயுக்தாவுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கிணங்க பாஜகவை சேர்ந்த இரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர் கபில் மிஸ்ரா என்பவரும் மட்டுமே சொத்து விவரங்களை அளித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த விவரங்களை அளிக்க மறுத்துள்ளனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ், “லோக் ஆயுக்தா சட்டப்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களை லோக் ஆயுக்தாவுக்கு அளிக்க தேவையில்லை. அது அவசியம் என சட்டம் மாற்றப்பட்டால் எங்கள் கட்சி அதை ஆதரிக்கும். அப்போது எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களை அளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேத்ரபால், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் தங்களின் சொத்து விவரங்களை அளித்துள்ளனர். அத்துடன் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியும் சொத்து விவரங்களை அளித்துள்ளார். அவர்கள் அனைவரும் இந்த விவரங்களை கேளாமலேயே அளித்துள்ளனர். இவை அனைத்தும் ஒரு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த செய்யப்பட்டவைகள் ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தாவை பரிந்துரை செய்யும் அன்னா அசாரேவின் சீடரான அரவிந்த் கெஜ்ரிவால்  கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே அந்த லோக் ஆயுக்தா உத்தரவை மதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.