டில்லி:

வடக்கு டில்லி மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக மேயர் ப்ரீத்தி அகர்வால் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் திலீப் பாண்டே கூறுகையில், ‘‘டெண்டர் நடைமுறையில் மேயர் ப்ரீத்தி அகர்வால் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனால் மேயர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மூத்த அதிகாரி ஒருவர் வடக்கு டில்லி மாநகராட்சி கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஒரு தொழில்நுட்ப டெண்டர் நடைமுறையில் ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக தலையிட்ட மேயர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பாஜக.வை போல் ஊழலுக்கு பெயர் பெற்றவர்கள் இந்த நாட்டில் யாரும் இருக்க முடியாது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

 

ராஜினாமா செய்வதற்காக அவருக்கு அளித்த கால அவகாசம் முடிந்துவிட்டது. அதனால் அவரை பாஜக பதவி நீக்கம் செய்ய வேண்டும். எங்களிடம் ஆதாரம் உள்ளது. பாஜக தங்களது முகத்தை பாதுகாத்து கொள்ள அவரை நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை ’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்களை ப்ரீத்தி அகர்வால் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சியாகும். ஆம் ஆத்மி அரசின் சுகாதார துறை அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக அக்கட்சியினர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.