டில்லி,

வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்யப்படுகிறது என்பதை பிராக்டிக்கலாக செய்து காட்டினார் ஆம்ஆத்மி எல்எலஏவான பரத்வாஜ்.

இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுகிறது என்று எதிரக்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன.

நடந்து முடிந்த உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றிபெற வாக்குபதிவு இயந்திர முறைகேடு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 12ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், டில்லி சட்டசபை அவசர கூட்டம் நேற்று கூடியது. அதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் இவிஎம்-ல் எவ்வாறு முறைகேடு செய்யப்படுகிறது என்பதை  செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

நேற்று டில்லி சட்டப்பேரவையில் செய்யப்பட்ட  செய்முறை விளக்கத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஸ்வேர்ட்  பதிவு செய்து எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் வேண்டுமோ, எந்த வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டுமோ, அவர்களுக்கு வாக்காளர்களின் வாக்குகளை மாற்றி விடலாம் என்பதை செய்து காட்டினார்.

எடுத்துக்காட்டாக,  ஆம் ஆத்மிக்கு 10 வாக்குகள், பிஎஸ்பிக்கு 2, பிஜேபிக்கு 3, காங்கிரசுக்கு 2 என்று வாக்குகள் பதிவாகி இருந்தால்,  வாக்குப்பதிவு முடிந்த பிறகு ரகசிய எண்ணைப் பயன்படுத்தி ஆம் ஆத்மிக்கு 2, பிஎஸ்பிக்கு 2, பிஜேபிக்கு 11, காங்கிரசுக்கு 2 என்று மாற்ற முடியும் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் ரகசிய எண் தெரிந்த ஒரு டெக்னிஷியனால்  இதுபோன்ற முறைகேட்டை சுலமாக செய்யலாம் என்றும் பரத்வாஜ் கூறினார்.

இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.