மும்பை: வரும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார் அந்த அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் ஆரோன் ஃபின்ச்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் ஆரோன் ஃபின்ச். கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியவர் இவர்.

முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 14ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஊடகத்திடம் பேசிய ஆரோன் ஃபின்ச், “எனக்கு 33 வயது ஆகிவிட்டாலும் கிரிக்கெட்டை இன்னும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் ஆடி வருகிறேன்.

வரும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வேண்டுமென்பதே ஆசை. ஆனால், காயமடையாமல் இருப்பதோடு, ஃபார்மை தக்கவைப்பதும் மிக முக்கியம். அப்படியிருக்கும் பட்சத்தில் எனது ஆசை நிறைவேறும்.

டெஸ்ட் அணியிலும் இடம்பெற வேண்டுமென ஆசைதான். ஆனால். அதற்கு தேர்வுக்குழு மனது வைக்க வேண்டும். தேர்வுக்குழு என்னை விரும்பவில்லை என்றால் டெஸ்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தயங்கமாட்டேன்” என்றார்.