ஆறு – உறவுகள் – கவிதை பகுதி 11

 

உறவுகள்கவிதை பகுதி 11

ஆறு

பா. தேவிமயில் குமார்

மணல் கொள்ளை

அன்று மனுநீதி காத்தான் ஒரு

மன்னன் !

இன்று,

மண் நீதி காத்திட

மன்னனுமில்லை, இங்கு

மண்ணுமில்லை !

சுரண்டல்

கட்டாயக் கருக்கலைப்பு

செய்வது போல

சற்றும் இரக்கமில்லாமல்

சுரண்டியதேன் ?

என் மணல் குழந்தைகளை ?

தாகம்

உங்களின்

தாகம் தீர்க்க

ஓடி வந்தேன்

ஆனால்…..

எனக்கு ஏன்

அமிலத்தையும்

அழுக்கையும்

புகட்டினீர்கள் ?

அணைகள்

பயிர்கள் செழிக்க

பயணப்பட்டேன் !

பாதி வழியில்

அடைபட்டேன் !

அடுத்த இடத்தின்

தாகம் தீர்த்திட

அனுமதி கிடைக்கவில்லை ?

என்னை சிறை வைப்பதேன் ?

கூவம்

அக அழுக்கை

அகற்றுகிறாள், கங்கை !

ஆனால்…….

ஊரிலுள்ள

புற அழுக்குகளோடு

பயணப்படும் நீயும்

கங்கையே !

கரை(ற)

கரைகளே என்

காவலர்கள்,

இப்போதெங்கே? அவர்கள்

ஓ…..

கறைகளுடனும்

கட்டிடங்களுடனும்

கரை(ல)ந்து நிற்கிறார்கள் !

இப்படிக்கு

க(த)ண்ணீருடன் ஆறு