ஆயுத பூஜை, தீபாவளியையொட்டி 5 இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது ஆவின்…

சென்னை; தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளான ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, 5 வகையான புதிய இனிப்புகளை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி,  ஸ்டப்டு டிரை ஜாமுன்,  மில்க் கேக், ஸ்டப்டு மோதி பாக் , காஜு பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி  ஆகியவை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்தது ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழிகாட்டுதலுக்கு இணங்க தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

மேலும் வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு கீழ்கண்ட 5 வகையான சிறப்பு இனிப்புகளை இன்று (23ந் தேதி) முதல் விற்பனையை துவங்கியுள்ளது.

ஸ்டப்டு டிரை ஜாமுன் 250 கிராம் ரூ.190,

நட்டி மில்க் கேக் 250 கிராம் ரூ.190,

ஸ்டப்டு மோதி பாக் 250 கிராம் ரூ.190,

காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.225,

பிளேவர்டு மில்க் பர்பி 250 கிராம் ரூ.165,

இந்த 5 வகையான இனிப்புகள் அடங்கிய (அசார்டட் பெட்டி) எல்லா இனிப்புகளும் கலந்தது 500 கிராம் ரூ.375 ஆகும்.

இவை அனைத்தும் முதன் முறையாக உயர்தர சமையல் வல்லுனர் ஜி தமிழ் அஞ்சரை பெட்டி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற விஜய் டேனி மற்றும் அவருடைய குழுவினர்களை கொண்டு தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின் படி சுகாதாரமான முறையில் தரமான ஆவின் நெய் பயன்படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.