சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் ஏற்றுமதியாகும் ஆவின் பால்!

சென்னை:

வின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் ஆவின் பாலுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின்பால் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு, விற்பனைசெய்யப்படும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. வரும் 1ந்தேதி முதல் அங்கு விற்பனைக்கு வருகிறது.

தமிழகத்தில், தினமும், 22.75 லட்சம்லிட்டர் ஆவின் பாலும்; 1 கோடி ரூபாய் மதிப்பிலான, தயிர், வெண்ணெய் உள்ளிட்டஆவின் பால் பொருட்களும் விற்பனையாகின்றன. இது தவிர அண்டை மாநிலங்கள் மற்றும்  மேற்குவங்கம், மஹாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும்  380 கோடிரூபாய் மதிப்பிலான,  பால் பொருட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.

யுஎச்டி (Ultra heat treated -UHT)  எனப்படும், திரவ உணவை பதப்படும் முறையான அல்ட்ரா பேஸ்காரி யாக்கம் முறையில்,  பாலை கொதிக்க வைத்து பதப்படுத்தி ஒரு லிட்டர் அளவில் பேக் செய்து வெளிநாடுகளுக்கு ஆவின் சப்ளை செய்து வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும் பால் குறைந்தது 6 மாதங்கள் வரை கெடாது. இந்த பாலை குளிர்சாதன பெட்டியிலும் அடைக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அடைக்கப்பட்டு அனுப்பப்படும் ஆவின்  பாலானது வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் போன்ற பிரபல கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பாலை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு 23 கண்டெய்னர் அளவிலான ஆவில் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.104.80 லட்சம் மதிப்பிலான சுமார் 2.18 லட்சம் லிட்டர் அளவிலான பால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தற்போது கத்தார் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்றும், அங்குள்ள முக்கிய கடைகளில் விற்பனை செய்யும் வகையில், அங்குள்ள ஏஜண்டுக்கு ரூ.7.49 லட்சம் மதிப்பிலான 15,600 பாக்கெட் பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கத்தாருக்கு மாதம் ஒன்றுக்கு 30ஆயிரம் முதல் 40ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.

ஆவின் பாலுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதால், விரைவில் கொழும்பு, மாலத்தீவு, மொரிசியல் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய  முயற்சிகள் நடைபெற்ற வருகிறது என்றும் கூறினார்.