ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அப்துல்லாபுர்மெட் என்ற பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்குள் புகந்த மர்ம நபர், அங்கிருந்த தாசில்தார் மற்றும் அந்த அறையினுள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் சிக்கி பெண் தாசில்தார் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கரெட்டி மாவட்டம். இந்த பகுதிக்குட்பட்ட பகுதியான அப்துல்லாபுர்மெட் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தாராக பணியாற்றி வருபவர் விஜயரெட்டி. அவருடன் மேலும் 2 பேரும் அங்கு பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு திடீரென நுழைந்த மர்ம நபர், தாசில்தார் மற்றும் அவரது அறையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். தீயில் சிக்கிய தாசில்தார் விஜயாரெட்டி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் அங்கு பணியில் இருந்த மற்ற 2 பேரும் தாசில்தாரை மீட்க போராடிய நிலையில், அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் இன்று மதியம் 1.30 மணி அளவில் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தாசில்தார் விஜயாரெட்டி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த மர்ம நபர் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக தாசில்தார் விஜயா ரெட்டியுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், திடீரென,  அவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தீயில் சிக்கிய விஜயா ரெட்டி  அலறியடித்துக்கொண்டே வெளியே வந்தார், அங்கு பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் அது வெற்றிபெறவில்லை. அவள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதற்கிடையில், தாசில்தாரை தீ வைத்து கொளுத்திய நபர் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://youtu.be/yVKO0p6bdi8