கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானி  அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை இந்திய விமானி  அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் துரத்தி சென்றார். அப்போது, அவரது விமானம் தாக்கப்பட்டது.

அப்போது தாம் சென்ற விமானத்தில் இருந்து குதித்த அபிநந்தன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார். இதையடுத்து, அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. 58 மணி நேரத்திற்கு பின்னர், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் ஒரு வித்தியாசமான நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய விமானியான அபிநந்தன் போன்ற பொம்மையை தயாரித்து, கராச்சியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்தில் வைத்து இருக்கிறது.

அபிநந்தன் மாதிரி வைக்கப்பட்டிக்கும் அந்த கண்ணாடி பேழையில், இடது புறம் தேநீர் கோப்பை வைக்கப்பட்டிருக்கிறது. அவர் பின்னால் ஒரு பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர் நிற்கிறார். அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்று அந்த உருவ பொம்மை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் பாகிஸ்தான் செய்தியாளரும், அரசியல் விமர்சகருமான அன்வர் லோதி. டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

விமானப்படை அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மையை கண்ணாடி பெட்டியில் பாகிஸ்தான் விமானப்படை வைத்திருக்கிறது. அவரது கையில் தேநீர் கோப்பையுடன் இருப்பது போன்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்.