டில்லி:

பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி கமாண்டர் அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால், வாகா எல்லைப்பகுதியில் வழக்கமாக நடைபெற்று வரும் எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியைபொதுமக்கள் பார்வையிட  மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்திய இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் தாக்குதலுக்கு உள்ளானதால், எதிர்பாராத விதமாக அவர் பாகிஸ்தானிடம் சிக்கினர்.

அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட உலக நாடுகள் வற்புறுத்திய நிலையில், நேற்று பாகிஸ்தான்  பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

இதையடுத்து அபிநந்தனை விடுவிக்கும் நடைமுறைகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண் டது.  அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

அபிநந்தமைன வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.  அபிநந்தனின் பெற்றோரும் அவரை வரவேற்க டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.

தினசரி மாலை வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களிப்பது வழக்கம். ஆனால், இன்று அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, கொடியிறக்க நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.