பெர்லின்

ஜெர்மனியில் நடக்கும் பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துக் கொள்ள சென்றுள்ள காஞ்சன் மாலா அரசின் நிதி கிடைக்காமல் பெர்லின் நகரில் பிச்சை எடுத்துள்ளார். இதற்கு ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சன் மாலா பாண்டே இந்தியாவை சேர்ந்த கண்பார்வையற்ற நீச்சல் வீராங்கனை.   ஜெர்மனியில் உள்ள பெர்லினில் நடைபெறும் பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துக் கொள்ள சென்றுள்ளார்.  இந்த போட்டியில் கலந்துக் கொள்ள அரசு தரப்பில் இருந்து நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தாலும், அந்த பணம் அவருக்கு தரப்படவில்லை.

இதனால் அவர் கடன் வாங்கி பெர்லினுக்கு சென்றுள்ளார்.  பெர்லின் சென்றும் அவருக்கு தொகை கிடைக்கவில்லை.  இதனால் கையில் பணம் இன்றி பெர்லின் நகரில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.   ஆயினும் வேதனையை மறைத்துக்கொண்டு, போட்டியில் கலந்துக் கொண்டார்.  வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த பரிதாபச் செய்தி வெளிநாட்டு தினசரி ஒன்றில் வெளியானது.  இதை விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா படித்து மிகவும் கோபம் அடைந்துள்ளார். அபினவ் பிந்த்ரா 2008 ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

கடுமையான கோபம் அடைந்த அபினவ் பிந்த்ரா, ”அரசின் நிதி ஒதுக்கப்பட்டும் பணம் கைக்கு கிடைக்காமல் காஞ்சன் மாலா அவதியுற்றுள்ளார்.  போட்டியில் கலந்துக் கொள்ள கடன் வாங்குவதும், பிச்சை எடுத்து வெளிநாட்டில் நாட்களை ஓட்டுவதும் தான் அரசு இவருக்கு அளித்த பரிசு.  இது முழுக்க முழுக்க அரசின் மெத்தனத்தின் காரணமே.  இதில் உடனடியாக பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் ஆகியோர் தலையிட்டு, அவருக்கு பணம் கிடைக்கச் செய்வதோடு, தவறு செய்த அதிகாரிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், ”அரசு சார்பில் நிதிஉதவி ஏற்கனவே பாராலிம்பிக் கமிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  அந்தப் பணம் காஞ்சன் மாலாவுக்கு ஏன் தரப்படவில்லை என்பது குறித்து பாராலிம்பிக் கமிட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.   அத்துடன் பெர்லினில் உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பதையும் விசாரித்து வருகிறோம்.  அந்த விசாரணை முடிவை வைத்தே எந்த கருத்தையும் சொல்ல முடியும்” என பதில் அளித்துள்ளார்.

தமிழில் “கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி மனது வைக்க வேண்டும்” என ஒரு பழமொழி உண்டு.   அது போல அரசு உதவி செய்தும் பணம் காஞ்சன் மாலாவுக்கு செல்லாமல் பிச்சை எடுக்க நேர்ந்தது இந்தியாவுக்கு மாபெரும் அவமானம் என்பதே விளையாட்டு வீரர்களின் ஏகோபித்த கருத்து.