டில்லி

பிரதமர் மோடியை எப்போதும் எதிர்த்துக் கொண்டு இருப்பது தவறு எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியதற்கு அபிஷேக் சிங்வி மற்றும் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நகர மேம்பாடு, குடிநீர்,  மற்றும் சுகாதாரத் துறைகளை நிர்வகித்து வந்தார். அவர் தலைநகர் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது பிரதமர் மோடி எதிர்ப்பு பற்றிக் குறிப்பிட்டார். அவரது கருத்துக்கள் அரசியல் உலகில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ஜெயராம் ரமேஷ், “பிரதமர் மோடியின் ஆட்சி முழுக்க முழுக்க எதிர்மறையான நிகழ்வு கிடையது. அவரது பணியை அங்கீகரிக்க வேண்டும். அதை விடுத்து அவரை  எதற்கெடுத்தாலும் எதிர்ப்பது அனைத்து நேரங்களிலும் உதவாது. மோடியின் 2014 முதல் 2019 வரையிலான நடவடிக்கைகளை நாம் கவனிக்க வேண்டிய நேரம் இப்போது நமக்கு வந்துள்ளது.

மக்கள் அவருக்கு 30% மேல் வாக்களித்துள்ளனர். அவர் அதனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். மோடி தன்னையும் மக்களையும் இணைக்கும் மொழியில்  உரையாடுகிறார். அவர் தனது ஆட்சியில் மக்கள் அங்கீகாரம் அளித்த மற்றும் கடந்த காலங்களில் நடக்காத விஷயங்களை இப்போது நடத்துகிறார் என்பதை நாம் உணர வேண்டும். இல்லையெனில் நம்மால் அவரை எதிர் கொள்ள முடியாது.’ என தனது உரையில் தெரிவித்தார்.

ஜெயராம் ரமேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அபிஷேக் சிங்வி மற்றும் சசி தரூர் ஆகியோர் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். அபிஷேக் சிங்வி டிவிட்டரில், “நான் எப்போதும் மோடியைக் குறை சொல்வது தவறு என அடிக்கடி  கூறி வ்ந்துளேன். அவர் பிரதமராக நாட்டுக்கு மட்டுமின்றி மக்களுக்காகப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அது நல்லதா கெட்டதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாகப் பிரதமரின் இலவச எரிவாயு திட்டம் மிகவும் நல்ல திட்டமாகும்” எனப் பதிந்துள்ளார்.

சசி தரூர் தனது டிவிட்டரில், “பிரதமர் மோடி எப்போது சரியானவற்றைக் கூறினாலும் அல்லது சரியான நடவடிக்கைகளை எடுத்தாலும் அவரை பாராட்ட வேண்டும் எனவும் தவறு செய்யும் போது விமர்சிக்க வேண்டும் எனவும் நான் கடந்த  6 வருடங்களாகச் சொல்லி வருகிறேன். நான் கூறிய அதே கருத்தை எதிர்க்கட்சியின் மற்ற தலைவர்களும் கூறுவதை நான் வரவேற்கிறேன்” என பதிந்துள்ளார்.