டிஜிட்டல் மயத்தின் அவலம்: ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 5ல் 1 போலி: அதிர்ச்சி சர்வே

டில்லி:

நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக போலிகளை நம்பி ஏமாறுதலும் அதிகரித்து வருகிறது.

இன்றைய இளைஞர்கள் இருந்த இடத்திலேயே மொபைல் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டும் உணவு பொருட்கள், மருந்துகள்  முதல் அனைத்து தேவையான பொருட்களை வாங்கி தங்களை சோம்பேறிகளாக்கி, இளம் வயதிலேயே பல்வேறு நோய்களை வரப்பிரசதமாக பெற்று அல்லல்பட்டு  வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது என்று சர்வே முடிவுகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் பொருட்கள் குறித்து, லோக்கல் சர்க்கிள் என்னும் இணையதளம் சர்வே நடத்தியது. இந்தியாவில் பிரபலமான  200 நகரங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது.

இதில்,  வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் அதிக அளவில் போலியானது விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

அதுபோல, ஆன்லைன் விற்பனை செய்யும் நிறுவனமான ஸ்நாப் டீல் (Snapdeal)  இயைதள நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களே அதிகமான அளவில் போலியானது என்றும் எச்சரித்து உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்ட பொருட்களில், சுமார் 20 சதவிகித பொருட்கள் போலியானது என்று வாடிக்கையாளர்களிடம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளதாக கூறி உள்ளது. அதாவது 5ல் ஒன்று போலி.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானது என்று 37 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து பிளிப் கார்ட் நிறுவனத்தின்மீது 22 சதவிகிதம் பேரும், அமேசான் நிறுவனத்தின் மீது 20 சதவிகிதம் பேரும், பேடிஎம் மீது 21 சதவிகிதம் பேரும்  போலி பொருட்களை விற்பனை செய்வதாக  குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் எது போலியானது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அதை எந்தவொரு நிறுவனமும் தெரிவிப்பதும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளவர்கள், போலி எது என்பதை கண்டறிய முடியவில்லை என்று 69 சதவிகிதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஒரு சிலர் போலி பொருட்கள் எது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அதை விவரிக்க மறுத்துவிட்டனர்.

இந்த காலை இளைஞர்கள், யுவதிகள் உபயோகிக்கும் சென்ட் போன்ற நறுமன அலங்கார பொருட்களிலேயே அதிக அளவில் போலிகள் நடமாடுவதாகவும், சுமார் 35 சதவிகிதம் போலியான அலங்கார பொருட்களே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் விளையாட்டு உபகரங்களில் 22 சதவிகிதம் போலியான தயாரிப்புகள் என்றும், அதுபோல பெண்கள் உபயோகப்படுத் ஹேன்ட் பேக் மற்றும் பைகள் போன்றவைகளில் 5 சதவிகிதம் போலியானது என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

போலியான பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆன்லைன் நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.