டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார்  11.58 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பவது வழக்கம். அதன்படி, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி,  30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு  போனசாக  வழங்கப்படும்  என்றும்,  அதற்காக ரூ.3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில்,  11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் என்றும், குறைந்தபட்சம்  ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.