5 நாளில் 36 ஆயிரம் பேர் தரிசித்த அமர்நாத் பனி லிங்கம்

ஸ்ரீநகர்:

மர்நாத் யாத்திரை தொடங்கி 5 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பனி லிங்கத்தை தரிசித்திருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது.

ஆண்டுதோறும், அமர்நாத் குகையில்  இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து  யாத்திரை செல்கிறார்கள்.

பகல்காம் மற்றும் பல்தால் ஆகிய இடங்களில் உள்ள மலையடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை குழுவினர் புறப்பட்டு செல்வது வழக்கம்.  குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. நடைப்பயணம் அல்லது குதிரையில் தான் செல்ல முடியும் என்பதால் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்

சுமார் 40 நாட்கள் மட்டுமே பனி லிங்கம் தென்படும் நிலையில், அதை தரிசிக்கும் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 27ந்தேதி தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடங்கிய நிலையில்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு  அமர்நாத் யாத்திரைக்கு சென்று வருகிறது. இதற்கிடையில் இரண்டு மூன்று  தடவை கடும் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களில்  36 ஆயிரத்து 366 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ள தாக கூறப்பட்டுள்ளது.  இன்று 6வது நாளாக   3,489 பேர் கொண்ட குழு புறப்பட்டு சென்றுள்ளதாக வும்,   நேற்று மட்டும் 22 ஆயிரத்து 550 பேர் பனி லிங்கத்தை தரிசித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு முதல் 6 நாளில் மட்டுமே 80 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.