வாஷிங்டன்

லக அளவில் சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 76.62 கோடி பேர் பாதிக்கப்பட்டு 16.91 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.  உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன. ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.

தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நான்கு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.    இதில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தடுப்பூசிகள் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.  குறிப்பாகச் சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு இரண்டாவதாக ரஷ்யாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இதுவரை சீனாவில் சுமார் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 3.2 லட்சம் பேருக்கும், அமெரிக்காவில் 2.11 லட்சம் பேருக்கும் பிரிட்டனில் 1.37 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இதில் இங்கிலாந்தில் மட்டும் 1.37 லட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சென்ற வாரக் கணக்காகும்.  தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

தற்போதுள்ள நிலையில் சுமார் 9 நிறுவன தடுப்பூசிகள் சோதனையில் முன்னணியில் உள்ளன.  இவற்றில் 6 தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்க அனுமதி பெற்றுள்ளன.   இவை அனைத்தும் முழு உற்பத்தியில் இறங்கியும் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவுக்கு மருந்து உற்பத்தி நடைபெறவில்லை.   ஆனால் மேலும் மருந்துகள் அனுமதி பெற்று உற்பத்தி அதிகரிக்கும் போது இந்த நிலை மாறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.