குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு! சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி:

நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக ஏபிபி நியூஸ் – சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதுபோல 65 சதவிகிதம் பேர் என்ஆர்சி வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டப்படி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்களுக்குக் குடியுரிமை வழங்கப் படாது என்றும், ஆனால் அங்கிருந்து அகதிகளாக வந்துள்ள சிறுபாண்மையினரான இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம்  சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில்,  குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ‘ஏ.பி.பி. நியூஸ்’ மற்றும் ‘சி–வோட்டர்’ நிறுவனங்கள் இணைந்து  நாடு முழுவதும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதுகுறித்து கூறியுள்ள அந்த நிறுவனங்கள், இது தொடர்பாக நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், அத்துடன், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முஸ்லிம் பிரிவினரில் இருந்து தலா 500 பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

அதன்படி, பெரும்பாலான மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும்,  அதாவது 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதே வேளையில், இந்த சட்டத்துக்கு 37 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும்,  இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என 56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பதாக வும்,  32 சதவீதம் பேர் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் கருத்து பதிவிட்டுள்ளதாக கூறி உள்ளது.

இந்த சட்டம் குறித்து கூறிய இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்,  63 சதவீதம் பேர் சட்டத்துக்கு எதிராகவும், 35 சதவீதம் பேர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்துக்களில் 67 சதவீதம் பேர் ஆதரவையும், 32 சதவீதம் பேர் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். பிற மதத்தினர் 62.7 சதவீதம் பேர் ஆதரவும், 36 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியிட்டு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் மக்கள்,  68.1 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும், 35.5 சதவீதம் பேர் ஆதரித்தும் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் 50.6 சதவீத ஆதரவும், 47.4 சதவீத எதிர்ப்பும் எழுந்துள்ளது என்று தெரிவத்து உள்ளது.

நாட்டின் கிழக்குப்பகுதியில் ஆதரவு 57.3 சதவீதம் (எதிர்ப்பு 42.7 சதவீதம்), மேற்கு பகுதியில் 64.2 (35.4), வடக்கு பகுதியில் 67.7 (31.2), தெற்கு பகுதியில் 58.5 (38.8) சதவீதம் என்ற வகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக சிவோட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.