பிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை பங்களாச் சுரண்டையில் முடித்த அன்னார், திண்டுக்கல் நகரில் உள்ள CVES ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தன்னை தமிழ் ஆசிரியராகத் தகுதிப்படுத்திக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதரின் பாட்டனார் தமிழ் மருத்துவராக இருந்தமையால், தமிழாசிரியராக இருந்த பண்டிதர் மருத்துவ இலக்கியத்தில் இயற்கையாகவே ஆர்வம் கொண்டார். 1882 இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரை 1882, திசம்பர் 27ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஆபிரகாமும் அவரது துணைவியாரும் தஞ்சாவூரில் குடியேறினர்.
1886 முதல் 1890 வரை பாதிரியார் பிளேக் துரை ஆபிரகாம் பண்டிதரையும் அவர்தம் மனைவியாரையும் சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலையில் முறையே தமிழ்ப் பண்டிதராகவும் தலைமை ஆசிரியையாகவும் நியமித்தார். அவர்கள் கையாண்ட கல்விமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.
1
 
கருணானந்த முனிவருடன் சந்திப்பு
1879 ஆம் ஆண்டு தமிழ் மருத்துவ துறையால் மூலிகை மலையாக அறியப்பட்ட சுருளி மலைக்கு ஆராய்ச்சிக்காகச் சென்ற பண்டிதர், தமிழ் மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கிய பல வல்லுனர்களைச் சந்தித்து தனது அறிவை பெருக்கிக் கொண்டார். சுருளி மலையில் கருணானந்த முனிவர் என்று அறியப்படும் தமிழ் மருத்துவ வல்லுனரைச் சந்தித்த பண்டிதர், அவரைத் தன் குருவாக எற்றுக்கொண்டு அவரிடம் தமிழ் மருத்துவ முறைகளைக் கற்றார்.
1890ஆம் ஆண்டுக்குப் பின் சித்த மருந்துகளைப் பெரும்பான்மையான அளவில் தயாரித்து “கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்” என்ற பெயரில் வழங்கிவந்தார்.
மருத்துவம் சார்ந்த பங்களிப்பு
ஆபிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு “கருணானந்தபுரம்” என்று பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் “பண்டிதர் தோட்டம்” என்றே அழைத்தனர். அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும் பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும் பெற்றார்.
தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் “கருணாநிதி மருத்துவக் கூடம்” (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய “கோரோசனை மாத்திரைகள்” பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள் (இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.
1908, பெப்ருவரி 22ஆம் நாள் ஆபிரகாம் பண்டிதரைச் சந்திக்க அந்நாளைய பிரித்தானிய ஆளுநரான சர் ஆர்த்டர் லாலி (Sir Arthur Lawley) என்பவரும் அவர்தம் துணைவியாரும் வந்தனர். அவர்கள் பண்டிதரின் பணிகளைப் பெரிதும் பாராட்டினர்.
1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு “ராவ் சாகிப்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின் நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு “லாலி சமூகக் கூடம்” (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.
1911ஆம் ஆண்டு, பண்டிதரின் மனைவியார் காலமானார். சில மாதங்களுக்கும் பின் பண்டிதர் பாக்கியம்மாள் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார்.
தமிழிசை பங்களிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபுசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர் என்றால் அது மிகையாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசைபயின்ற பண்டிதர், பின் தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார்.
மேலும் பல இசை கருவிகளை இசைக்கப் பயின்ற  hண்டிதர்,  ஆர்மோனியம்,  வீணை,  பிடில்  முதலிய வாத்தியங்களில் புலமை பெற்றிருந்தார். தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசைமரபே என்பதை உணர்ந்த பண்டிதர் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல பழந்தமிழ் இசை நூல்களைக் கற்றுணர்ந்தார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் இசையின் மேல் கொண்ட பற்றினால், 1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். பல்வேறு பாடகர்களையும் இசை நிபுணர்களையும் மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்க தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917 இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார். 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பரதரின் “நாட்டிய சாஸ்திரம்”, சாரங்க தேவரின் “சங்கீத ரத்னாகரம்” முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.
பண்டிதர் ஆற்றிய இலக்கியப் பு
ஆபிரகாம் பண்டிதர் கிறித்தவ உண்மைகளைத் தமிழில் எடுத்துரைக்கும் பணியிலும் ஈடுபட்டார். பல்லாண்டு சமய ஆய்வின் விளைவாக அவர் “நன்முறை காட்டும் நன்னெறி” என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் தத்துவமும், ஒழுக்கநெறியும் பக்தியும் துலங்குகின்றன.
2
மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்த ஆரம்பகாலத்தில் பண்டிதர் வறுமையால் வாடினார். அப்போது அவர்,
“காக்கும் வழி உனக்கில்லையா – மகிழ்
வாக்குவதும் பெரும் தொல்லையா – எனை
ஆக்கி அணைத்து அழித்து அனைத்தையும்
நோக்கும் கருணாகரக் கடலே
கண்டால் உனை விடுவேனோ – மனமலர்
செண்டால் பாதம் துதியேனோ – பெரும்
சண்டாளன் என்றெனைத் தள்ளாது கொள்வையேல்
கண்டோர் கேட்டோர் களிக்கப் புகழ் சொல்வேன்”
என்று இறைவனை நோக்கி வேண்டுகிறார்.
விவிலிய வரலாற்றில், யோசேப்பும் அன்னை மரியாவும் இயேசு குழந்தையை எருசலேம் கோவிலில் காணிக்கையாகக் கொடுக்க வந்தபோது சிமியோன் எதிர்கொண்டு, குழந்தையைத் தம் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத் துதித்தார். கண்டேன், கண்டேன், என் ஆண்டவரை இன்று கண்குளிரக் கண்டேன் என்று சிமியோன் ஆனந்தப் பரவசமடைந்தார் (லூக்கா 2:22-39). இக்காட்சியை ஆபிரகாம் பண்டிதர்,
“கண்டேன் என் கண்குளிர – கர்த்தனை இன்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
அண்டாண்ட புவனங்கள் கொண்டாட மாய
சண்டாளன் சிறைமீட்கும் சத்தியனை நித்தியனை
முத்தொழில் கர்த்தாவாம் முன்னவனை
இத்தரை மீட்க எனை நத்திவந்த மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் – கண்மணியை”
என்று தம் அகக் கண் காட்சிக்குச் சொல்வடிவம் தந்து, அதைப் பாடுவோரின் உள்ளத்தையும் பரவசப்படுத்துகின்றார்.
ஆபிரகாம் பண்டிதரின் இறப்பு ஆபிரகாம் பண்டிதர் 1919, ஆகத்து 31ஆம் நாள் காலமானார். பல்லாண்டுகள் அவர் ஆய்வுகள் நிகழ்த்திய தளமாகிய “பண்டிதர் தோட்டத்திலேயே” அவர் அடக்கப்பட்டார்.
இன்று, பண்டிதரின் வழிமுறையினர் கருநாடக இசையோடு நெருங்கிய தொடர்புடைய லாலி சமூகக் கூடம், பண்டிதர் தோட்டம், கருணாநிதி மருத்துவக் கூடம் ஆகியவற்றைக் கருத்தாய்க் கவனித்துவருகின்றனர். அவருடைய வீட்டுக்கு இட்டுச் செல்லும் தெரு பண்டிதரின் பெயரைத் தாங்கிநிற்கிறது.
பண்டிதரின் காலத்துக்குப் பிறகு நடந்துவருகின்ற இசை ஆய்வுகள் அவருடைய அழியாப் புகழுக்கு அடையாளங்களாக உள்ளன.