“தலைமறைவு” பைனான்சியர் அன்புச்செழியன் ஈபிஎஸ் -ஓபிஎஸ்-உடன் தனிஅறையில் ஆலோசனை!

--

சென்னை,

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட பைனான்சியர் அன்புச்செழியன் இன்று நடைபெற்ற அமைச்சர் இல்ல விழாவில் கலந்துகொண்டார். அதையடுத்து, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் தனி அறைக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.

இது விழாவுக்கு வந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இயக்குனர் நடிகர் சசிகுமாரின் உறவினரான  இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தன் தற்கொலைக்கு  காரணம் பைனான்சியர் அன்புச்செழியன்தான் என்றும்,  அவரது தொல்லை தாங்காமல் அவமானத்தால் இந்த முடிவை மேற்கொள்கிறேன். என்று எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.    இந்த நிலையில் அன்புச்செல்வன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம்  கடந்த டிசம்பர் 19ம் தேதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழக  கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள  செல்லூர் ராஜுவின் பேரன்களுக்கு காது குத்தும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழா முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு  துணைமுதல்வர் உள்பட  தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில், பைனான்சியர் அன்புசெழியன்   கலந்துகொண்டார். அவருக்கு அமைச்சர்கள் பலர், வணக்கம் வைத்துச் சென்றனர்.

விழாவுக்கு முதல்வர் வந்ததும், அவருக்கு பின்னால் வந்து அமர்ந்துகொண்டார் அன்புச்செழியன் . காத்து குத்து விழா முடிந்ததும், முதல்வரையும், துணை முதல்வரையும் செல்லூர் ராஜு விருந்துக்காக அறைக்குள் அழைத்துச் சென்றார். அப்போது அவர்களுடன் அன்புச்செழியன் மட்டும் சென்றார். மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தனியறையில் அன்புச்செழியன் முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட மற்றவள்கள் ஆச்சரியம் அடைந்தனர். “தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருடன் முதல்வரும், துணை முதல்வரும் அப்படி என்ன ஆலோசனை செய்திருப்பார்கள்” என்று அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.