தமிழ்நாடு வெதர்மேன் மீது பேஸ்புக்கில் அவதூறு

சென்னை:

பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள காளிராஜ் என்பவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வீடுகள் சிறியதாய் இருந்த போது குடும்பம் பெரியதாய் இருந்தது. வீடுகள் பெரியதாய் மாறிய பின் குடும்பங்கள் சிறியதாய் போயின’’ என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதில், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ குடும்பத்தினரின் புகைப்படத்தை காளிராஜ் பயன்படுத்தியுள்ளார். இதற்கு பல தரப்பிலும் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. புகைப்படத்தை நீக்க கோரி பலரும் கமென்ட் செய்துள்ளனர். எனினும் நீக்கப்படவில்லை. மேலும் இது குறித்து பேஸ்புக் நிறுவனத்திடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ எனது சிறிய மகளின் புகைப்பத்துடன் எனது குடும்பத்தின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதன் மீது பல கமென்ட்கள் பதிவிடப்படுகிறது. நான் குடும்பத்தை பிரிந்து தனியாக வசிப்பதாக மக்கள் நினை க்கின்றனர். இவர்கள் மறைமுக இலக்கை கொண்டு இதுபோன்ற பதிவை வெளியிட்டும், கமென்ட்களையும் பதிவிடுகின்றனர்.

இது போன்ற பதிவுகளில் அவர்களுடைய மகளின் புகைப்படம் இருந்தால் அதன் வலி தெரியும். வானிலை நிலவரம் கூறி வரும் எனக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. ஆனால், என்னை பழிவாங்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். புகார் அளித்து பேஸ்புக் நிறுவனம் இந்த பதிவை நீக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.