குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி 5 இடங்களிலும் தோல்வி

காந்திநகர்: குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி 5 இடங்களிலும் தோற்றிருக்கிறது.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மாணவர் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் தேசிய மாணவர் அமைப்பு வென்றிருக்கிறது.

5 மாணவர் பேரவைக்கான இடங்களில் 3 இடங்களை அந்த அமைப்பு ஜெயித்திருக்கிறது. ஒரு இடத்தை சுயேட்சை பெற்றிருக்கிறது. அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் களமிறங்கிய ஐந்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.

பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இடது ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு தலா ஒரு இடத்தை பிடித்தன.

பதினொன்றில் 5 துறைகளில் தேர்தல் நடைபெற்றது. இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: சமூக அறிவியல் துறையில் பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்க வேட்பாளர் அஷ்ரப் மொத்தம் 167 வாக்குகளில் 114 வாக்குகள் பெற்று வென்றார்.

இடது ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு பிராச்சி லோகண்டே மொத்தம் 38 வாக்குகளில் 30 வாக்குகளை பெற்று ஜெயித்தார். இந்திய மாணவர் கூட்டமைப்பு வேட்பாளர் சித்தரஞ்சன் மொத்த 166 வாக்குகளில் 94 வாக்குகளையும் பெற்றார்.

இது குறித்து பேசிய மாணவர்கள் பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கம், 3  ஆண்டுகளாக வென்ற நிலையில், இந்திய மாணவர் கூட்டமைப்பு, இடது ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு முதல் முறையாக வேட்பாளர்களை நிறுத்தி இடங்களை வென்றன என்று கூறினர்.

இடதுசாரி மாணவர்கள் தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஏபிவிபி கருத்து தெரிவித்துள்ளது.