குஜராத் பல்கலையில் ஆர்எஸ்எஸ் மாணவர்கள் அட்டூழியம்: பேராசிரியர் முகத்தில் கருப்புமை பூசி அராஜகம் (வீடியோ)

ராஜ்காட்:

குஜராத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வந்த பேராசிரியர் ஒருவரின் முகத்தில் கருப்பு மையை பூசி ஏபிவிபி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் நகரில் உள்ள கே.எஸ்.கே.வி.கே.யு. என்ற பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் செனட் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 22ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவுமம், தங்களது வேட்புமனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாகவும்  கூறி  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக செனட் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்ததாக கூறி , பேராசிரியர் கிரின் பாக்சி என்வரை ஏபிவிபி மாணவர்கள் தாக்கி முகத்தில் மை பூசி அவமானப்படுத்தினர். வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் அவரை  எதுவும் பேச விடாமல் ஏடிவிபி மாணவர்கள் வெளியே  இழுத்துச் சென்று  அவர் முகத்தில் கருப்பு மை பூசி   அவருக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் பேராசிரியரை இவ்வாறு அவமானப்படுத்தினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முகத்தில் அதிக அளவில் மை பூசியதால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் பாக்சி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முகத்தில் எரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததன் பேரில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுமார் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.  இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 
 https://www.youtube.com/watch?v=qVyGMHUrjBE