வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகினி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக உள்ளது. பொதுவாக பொதுமக்களே வெளியில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு எண்ணும் நபர்கள், வேட்பாளர்களுக்கு இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி அறையிலும், ஏசி வசதி செய்து தரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதகாப்பு மற்றும் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.