சென்னை: வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், மறுபயன்பாட்டிற்கு, குறிப்பாக, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் சென்னை வேளச்சேரியிலுள்ள குடியிருப்புவாசிகள்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வேளச்சேரி வாசியான ஆர் விஸ்வநாதன் என்பவருக்கு, ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியாகும் நீரை, ஏன் மறுபயன்பாடு செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அந்த தண்ணீரை ஆய்வகத்திலும் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது முடிவுகள் சாதகமாகவே வந்துள்ளது.

சென்னை மெட்டெக்ஸ் லேப் பிரைவேட் லிமிடெட் ஆய்வகத்தின் சோதனை முடிவின்படி, ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீர் IS:10500:2012 குறியீட்டின்படி குடிப்பதற்கேற்ற தரநிலையிலேயே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறம், வாசனை, திரவத்தன்மை, கடினத்தன்மை, காரத்தன்மை, சல்ஃபேட், இரும்புச்சத்து, நைட்ரேட், ஃப்ளோரைடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விஸ்வநாதன் வாழும் குடியிருப்புப் பகுதியில், மொத்தம் 40 ஏர் கண்டிஷனர் இயந்திரங்கள் உள்ளன. அவை, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரங்கள் இயங்கும். இதனால் 1 மணிநேரத்திற்கு 2-3 லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. ஒரு நாளைக்கு 960 லிட்டர் என்ற விகிதப்படி ஒரு ஆண்டிற்கு 3.45 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கிறது.

இந்த நீரை எதற்காக தேவையின்றி அநியாயமாக வீணாக்க ‍வேண்டும். இதைப் பருக முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே விஸ்வநாதன் போன்றோரின் எண்ணமாக இருக்கிறது.