ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியில் விபத்து:   ஊழியர் பலி

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதாரஜினிகாந்த் நடத்தி வரும் சென்னை ஆஷ்ரம் பள்ளியில் பணியாற்றும்  தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஷ்ரம் பள்ளி என்ற பெயரில் சென்னை வேளச்சேரி சாலையில் ஒரு பள்ளியையும், மேற்கு மாட சாலை மேற்கு சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் ஆஷ்ரம் மேல் நிலைப்பள்ளியையும் நடத்தி வருகிறார்.

இந்தப்பள்ளியில் ஆறுமுகம் (வயது 48)  என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக,  தோட்டப்பராமரிப்பு பணி செய்து  வந்தார். இவர்  மதுராந்தகம், பிள்ளையார்ப்பட்டியை சேர்ந்தவர்.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மதியம் 3 மணி அளவில் ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்டிக்கொண்டிருந்ததாகவும், அப்போது மரத்திலிருந்து  தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் தலையின் ஆறுமுகத்துக்கு தலையின் பின்புறம் பலத்த  காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்  108 ஆம்புலன்ஸ் மூலம் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.